July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் மேல் மாகாணம் உன்னிப்பாக அவதானிக்கப்படும்”; சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும்  மேல் மாகாணத்தில் விசேட கண்காணிப்பு முன்னெடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார்.

நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள டெல்டா கொரோனா வைரஸ் தொற்று நிலையை அடுத்து, தேவையான பகுதிகளுக்கு பயண கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் என அவர் கூறினார்.

கொழும்பு, சன்டே டைம்ஸ் செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

பயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள காலப்பகுதியில் நாடு முழுவதும் எந்த ஒரு கூட்டங்களையும் நடத்துவதற்கு அனுமதிக்கப்படாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

முகக் கவசம் அணிவது, குறைந்தது ஒரு மீட்டர் தூர சமூக இடைவெளியை பேணுவது, கைகளை கழுவுவது மற்று ஒன்று கூடல்களை தவிர்ப்பது போன்ற நான்கு முக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டும்.

பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள போதும் தளர்த்தப்பட்ட போதும் இந்த சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவுறுத்தினார்.

தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டும் கொரோனா தொற்றை முடிவுக்கு கொண்டு வர முழுமையான தீர்வு அல்ல. எனினும் இது தொற்றின் தீவிர தன்மையை குறிக்கின்றது.

நோய் தொற்று ஏற்படாமல் இருப்பதும் அதை வேறு ஒருவருக்கு பரப்பாமல் இருப்பதும் ஒவ்வொருவரதும் பொறுப்பாகும் எனவும்  அவர் வலியுறுத்தினார்.

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயண கட்டுப்பாடுகள் நாளை (21) அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் இரவு 10 மணிக்கு அமுல்படுத்தப்பட உள்ளது.

அத்தோடு, பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு  23 ஆம் திகதி இரவு 10 மணிக்கு அமுல்படுத்தப்படும் பயணக்கட்டுப்பாடுகள் மீண்டும் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நீக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார்.