November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொரோனா’வை எதிர்கொள்ள அவசரமாக வடக்கில் தயாராகும் வைத்தியசாலைகள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கும் நிலையில் வடக்கின் நிலைமையை எதிர்கொள்ள அவசரமாக நான்கு வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சு தயார் செய்கின்றது.

நாட்டில் தற்போது கொரோனாவின் மூன்றாவது அலை அதிகரித்துச் செல்லும் நிலையில் நாடு முழுவதும் இதுவரையில் 5 ஆயிரத்து 354 பேர் கொரோனாத் தாக்கத்துக்கு இலக்கான அதேநேரம், 3ஆவது அலையில் மட்டும் ஆயிரத்து 907 பேர் பாதிப்படைந்துள்ளனர். இதனால் எதிர்காலத்தில் கொரோனா நோயாளர்கள் தொகை அதிகரித்தால் அதனை எதிர்கொள்ளும் வகையில் மாகாணங்களில் வைத்தியசாலைகள் தயார் செய்யப்படுகின்றன.

இவற்றின் அடிப்படையில் வடக்கு மாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் விடத்தல்தீவு வைத்தியசாலையும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம் வைத்தியசாலையும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மருதங்கேணி வைத்தியசாலையும் தயார்படுத்தப்படுகின்றது. அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்துக்கான கொரோனா சிகிச்சை வைத்தியசாலை கிருஷ்ணபுரம் பகுதியில் அமைக்கப்படுகின்றது.

சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய அமைக்கப்படும் இந்த வைத்தியசாலைகளில் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான கொரோனா சிகிச்சை நிலையமாக இயங்கவுள்ள மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை எதிர்வரும் 19ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் மருதங்கேணி ஆரம்ப வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாக தயார் நிலையில் இருக்கும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோன்று ஏனைய 3 வைத்தியசாலைகளில் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் அதற்கான அமைப்புப் பணிகளை நிறைவு செய்யுமாறு சுகாதார அமைச்சால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுமார் 100 படுக்கைகளைக் கொண்டதாகக் கொரோனா சிகிச்சை நிலையம் அமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.