Photo; Facebook
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பிரதேசத்தில் பயணக் கட்டுப்பாட்டை மீறி வீதியில் பயணித்ததாக தெரிவித்து, சிலரை வீதியோரத்தில் முழந்தாளிட வைத்து தண்டனை வழங்கிய சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ சிப்பாய்கள் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் சிலர் வீதியோரத்தில் முழங்காலில் இருந்து கைகளை உயர்த்தியவாறு இருக்கும் புகைப்படங்கள் நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தன.
ஏறாவூர் பகுதியில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய்கள் சிலர், பயணக் கட்டுப்பாட்டை மீறிய பொதுமக்களுக்கு இவ்வாறு தண்டனை வழங்கியுள்ளதாகவே தெரிவிக்கப்பட்டன.
இந்த விடயம் குறித்து பல்வேறு தரப்பினரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த நிலையில், இது தொடர்பில் ஆராய்ந்த இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவச் சிப்பாய்களை, குறித்த பணியில் இருந்து நீக்கி அவர்கள் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை நடத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி குறித்த இராணுவ சிப்பாய்கள் இடமாற்றம் செய்யப்பட்டு, இராணுவ பொலிஸாரினால் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த சம்பவத்தில் இராணுவ சிப்பாய்கள் தவறிழைத்திருந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.