நாட்டில் அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாட்டை இப்போதைக்கு நீக்க வேண்டாம் என்று இலங்கை மருத்துவர்கள் சங்கம், ஜனாதிபதியை கேட்டுக்கொண்டுள்ளது.
இலங்கை முழுவதும் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாட்டை ஜுன் 21 ஆம் திகதி முதல் நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையிலேயே மருத்துவர்கள் சங்கம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போதைய நிலைமையில் நாட்டை திறப்பதால் தொற்றுப் பரவல் மேலும் மோசமடையலாம் என்று அந்தச் சங்கம் கடிதம் மூலம் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தொடர்ந்தும் இரண்டாயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் நாளாந்தம் அடையாளம் காணப்பட்டு வரும் அதேவேளை, நாளாந்தம் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் 50 க்கும் அதிகமாகவே இருப்பதாக இலங்கை மருத்துவகள் சங்கம், அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை நாட்டில் மாறுபட்ட ‘டெல்டா’ கொவிட் வைரஸ் சமூகத்தில் பரவலாக இருப்பதற்கான ஆதாரங்களும் உள்ளதாகவும், இந்த வைரஸ் பரவும் வேகம் அதிகம் என்பதனால் நாட்டில் பயணக் கட்டுப்பாட்டை தளர்த்துவதன் ஊடாக புதிய வைரஸ் பரவல் தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும் அந்தச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் இந்த விடயம் குறித்து ஆராய்ந்து முடிவு எடுக்குமாறு இலங்கை மருத்துவகள் சங்கம் ஜனாதிபதியை கேட்டுக்கொண்டுள்ளது.