November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாகாண அரசாங்கத்தை பாதுகாப்பதற்கான முயற்சிகளை இந்தியா எடுக்கவில்லை; சிவசக்தி ஆனந்தன்

போருக்கு பின்னரான காலப்பகுதியிலும் மாகாண அரசாங்கத்தை பாதுகாப்பதற்கான முயற்சிகளை இந்தியா எடுக்கவில்லை என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் பத்மநாபாவின் நினைவு தினத்தை முன்னிட்டு வவுனியாவில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்;

பத்மநாபாவையும் ஈழ விடுதலைப் போராட்டத்தினையும் எந்த ஒரு காலத்திலும் பிரித்து பார்க்க முடியாது.தமிழ் மக்கள் பாரிய இழப்புகளை சந்திக்கப் போகின்றார்கள் என்பதை 30 வருடத்திற்கு முன்பாகவே பத்மநாபா தீர்க்க தரிசனமாக தெரிவித்திருந்தார்.

இலங்கை-இந்திய ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை தடுத்திருக்க முடியும்.அதனை நடைமுறைப்படுத்துவதில் எங்களைத் தவிர ஏனைய தமிழ்த் தலைவர்கள் மிகப்பெரிய தவறிழைத்திருக்கின்றார்கள்.இலங்கை அரசாங்கமும் பாரிய தவறிழைத்துள்ளது.

இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 30 வருடங்கள் கடக்கின்ற நிலையிலும் குறைந்த பட்சம் போருக்கு பின்னரான இந்த 12 வருட காலப்பகுதியிலாவது மாகாண அரசாங்கத்தை பாதுகாப்பதற்கான எந்த விதமான முயற்சிகளையும் இந்தியா எடுக்கவில்லை.

இன்று மாகாண அரசில் இருக்கக்கூடிய எச்ச சொச்ச அதிகாரங்களையும் பறித்தெடுக்கும் செயற்பாட்டில் இந்த அரசு ஈடுபட்டிருக்கின்றது.மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாகவும்,வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழும் உள்ளீர்க்கும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

பல உயிர்த்தியாகங்களிற்கு மத்தியில் கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறைமையில் அனைத்தும் பறித்தெடுக்கப்பட்டு வெறும் கோதாக இருக்கும் நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே தமிழ் மக்கள் எதிர்காலத்தில் ஒரு கௌரவமான அரசியல் தீர்வினை பெற்றுக் கொள்வதற்கு இந்திய அரசாங்கம் முழு முயற்சியினை எடுக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.