‘சீன கடற்படை, இலங்கையில் புதிய துறைமுக திட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை இந்தியாவின் பாதுகாப்பிற்கு ‘அச்சுறுத்தலாக இருக்கக்கூடும்’ என இந்திய கடற்படையின் துணைத் தளபதி ஜி.அசோக் குமார் தெரிவித்துள்ளார்.
ஏ.என்.ஐ. செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே இந்திய கடற்படையின் துணைத் தளபதி ஜி.அசோக் குமார் இவ்வாறு கூறியுள்ளார்.
சீனாவின் இதுபோன்ற நடவடிக்கைகள் குறித்து உன்னிப்பாக கண்காணிக்க வேண்டிய அவசியம்.
இந்தியாவின் கடல் எல்லைகளை பாதுகாக்க இந்திய கடற்படை ஆயத்தமாக உள்ளதாக தெரிவித்துள்ள அவர், நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த எந்த வழியும் இல்லை என்றும் கூறினார்.
இலங்கையில் சீனர்கள் அத்துமீறி நுழைந்து வருகின்றனர்.தற்போது துறைமுக நகரை உருவாக்கி வருகின்றனர்.
இதற்கு முன்பு, அவர்களால் கட்டப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகத்தையும் தற்போது தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
மும்பை மீது 26/11 தாக்குதலுக்கு பிறகு, கடலோர பாதுகாப்பு வலையமைப்பை நிறுவுவது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுத்துள்ளதுடன், கண்காணிப்பு திறன்களை மேம்படுத்தியுள்ளது.
எனவே, சீனாவின் நடவடிக்கைகளினால் இந்தியாவை எவரும் அச்சுறுத்தலுக்கு உட்படுத்த முடியாது என அவர் கூறினார்.
“கடல்சார் களத்தில் நாம் அச்சுறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டன.ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இருந்ததை விட இன்று நாங்கள் மிகவும் தயாராக இருக்கிறோம்” என்றும் இந்திய கடற்படையின் துணைத் தளபதி ஜி.அசோக் குமார் தெரிவித்துள்ளார்.