January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சேதனப் பயிர்ச்செய்கைக்கு 12 வெளிநாட்டு தூதரகங்கள் ஒத்துழைக்கும் என அரசாங்கம் நம்பிக்கை

சேதனப் பயிர்ச் செய்கைக்கு தேவையான ஆதரவை வழங்க 12 வெளிநாட்டு தூதரகங்கள் இணங்கியுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேதனப் பசளை மற்றும் சேதனப் பயிர்ச்செய்கை தொடர்பில் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரோக்கியமான சந்ததியை உருவாக்குவதற்கு சேதனப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவது காலத்தின் தேவையாகியுள்ளதுடன், அதற்கு முறையான வேலைத்திட்டமொன்றை ஏற்படுத்துவது முக்கியமாகும் என பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

விவசாய பெருமக்கள் மத்தியில் சேதனப் பசளை தொடர்பாக தவறான கருத்து ஏற்படுத்தப்பட்டுள்ளமையால், அவர்களை விழிப்பூட்டுவதற்கு முறையான வேலைத்திட்டமொன்று அவசியம் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாடசாலைகள் மற்றும் விகாரைகளை மையமாகக்கொண்டு சேதனப் பயிர்ச்செய்கைக்கு பிள்ளைகள் மற்றும் மக்களை பழக்கப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதன்போது, சேதனப் பயிர்ச்செய்கைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என்று அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

60 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலமாக நாட்டின் பயிர்ச்செய்கை இரசாயன பசளை பாவனைக்கு பழக்கப்பட்டுள்ளதால், மக்களின் ஆரோக்கியம் மோசமடைந்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அனுருத்த பாதெனிய தெரிவித்துள்ளார்.

This slideshow requires JavaScript.