July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள டெல்டா வைரஸ் வகை நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவும் அபாயம்!

இலங்கையில் தெமடகொட பகுதியில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தியாவில் பரவி வரும் டெல்டா வைரஸ் வகை நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரித்துள்ளது.

நாட்டில் இரு தினங்களுக்கு முன்பு அதிக வீரியம் கொண்ட டெல்டா (B.1.617.2) கொரோனா வைரஸ் தொற்றுடன் கொழும்பு, தெமட்டகொட பிரதேசத்தில் ஐவர் அடையாளம் காணப்பட்டனர்.

இவ்வாறு டெல்டா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள 66 வத்தை பகுதியில் குறைந்த வசதிகளுடன் 149 குடும்பங்களை  சேர்ந்த சுமார் 900 பேர் வசித்து வருவதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

அத்தோடு அங்கு வசிப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் தூய்மைப்படுத்தும் தொழிலில் ஈடுபடுபவர்கள் எனவும் பலர் முச்சக்கரவண்டி ஓட்டுனர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சிலர் போதை  பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்றும் பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண சுட்டிக்காட்டினார்.

இந்த பின்னணியில், புதிய டெல்டா வைரஸ் வகை நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவக்கூடிய கடுமையான ஆபத்து உள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.

நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள போதிலும் அப்பகுதியில் வசிப்பவர்கள் சுகாதார வழிகாட்டுதல்களையும் நடைமுறைகளையும் புறக்கணித்து வருகின்றனர்.

இது குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கையாக இருப்பதுடன், புதிய மாறுபாட்டின் பரவலை தடுக்க அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனவும் தலைவர் உபுல் ரோஹண கேட்டுக் கொண்டுள்ளார்.