தெஹிவளை மிருகக் காட்சிசாலையில் இருந்த சிங்கத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, சிங்கத்துக்கு சிகிச்சை வழங்குவது தொடர்பாக இலங்கை இந்தியாவின் ஆலோசனைகளைப் பெறத் தீர்மானித்துள்ளது.
கொரோனா தொற்று ஏற்படும் விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக இந்திய மத்திய மிருகக் காட்சிசாலை ஆணையத்தின் ஆலோசனைகளைப் பெறவுள்ளதாக இலங்கை தேசிய விலங்கியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் மிருகம் ஒன்றுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
14 வயதான தோர் எனும் சிங்கம் சில நாட்களாக சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டும், உணவு உட்கொள்ளாமலும் இருந்ததை அடுத்து, பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிங்கத்துக்கு செயற்கை சுவாச ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சை வழங்கப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் போது, ஒன்பது சிங்கங்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளானதோடு, இரண்டு சிங்கங்கள் உயிரிழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.