நாட்டில் எதிர்வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீண்டும் ரயில் சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதால் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.
எனினும் மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக ரயில் சேவைகள் கடந்த காலத்தை போலவே இயக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மேல் மாகாணத்துக்குள் மாத்திரம் 34 ரயில் சேவைகள் இடம்பெறும் எனவும் பொதுப் பயணிகள் சமூக இடைவெளியை பேணுவது கட்டாயமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொவிட் வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு நாடு தழுவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடை திங்கட்கிழமை காலை 4 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.
இந்நிலையில் ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதால் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் ரயில் போக்குவரத்து சேவையை திங்கட்கிழமை காலை முதல் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய 21 ஆம் திகதி முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி இரவு 10 மணி வரை அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் பயணிகளுக்காக மேல் மாகாணத்திற்குள் மாத்திரம் 17 ரயில் சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.