
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கடந்த காலங்களில் பல தடவைகளும் ராஜபக்ஷக்கள் பேச்சுக்கு அழைத்து ஏமாற்றியதைப் போன்றே, இம்முறையும் பேச்சுவார்த்தை என்று அறிவித்து, ஒத்திவைக்கப்பட்டதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
ராஜபக்ஷ அரசாங்கம் புதிய அரசியலமைப்பை ஒருபோதும் கொண்டுவராது என்றும் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்கவும் மாட்டாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் தமக்கு தீர்வை வழங்காது என்பது வடக்கு- கிழக்கு தமிழ் மக்களுக்கும் அவர்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் தெரிந்த விடயமே என்றும் எதிர்க்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
கூட்டமைப்புடனான முதலாவது பேச்சுக்கு, முதல் நாள் காலை அழைப்பு விடுத்த ஜனாதிபதி செயலகம், அன்று மாலையே பேச்சை இரத்துச் செய்துள்ளது என ஊடகங்களில் செய்தி வெளியாகினாலும், பேச்சு இரத்துச் செய்யப்பட்டமைக்கான காரணம் அறிவிக்கப்படவில்லை என்றும் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி சர்வதேச அழுத்தங்களைச் சமாளிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை பேச்சுக்கு அழைத்ததாகவும், இறுதியில் பேச்சை நடத்தாமல் ஏமாற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி மலர்ந்தால், தமிழர்களுக்கான தீர்வு வழங்கப்படும் என்ற சஜித் பிரேமதாஸவின் வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.