டெல்டா வைரஸ் பரவ ஆரம்பித்தால் அச்சுறுத்தல் அதிகமாகும். சுகாதார தரப்பினால் தாங்கிக்கொள்ள முடியாத நெருக்கடி நிலைமை உருவாகும் என்பதை ஏற்றுக்கொள்வதாக கூறும் பிரதி சுகாதார பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத், பயணக்கட்டுப்பாட்டை மாத்திரம் பிறப்பித்து,சட்டத்தால் கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாது. பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட பின்னரும் மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றியாக வேண்டும்.இல்லையேல் நிலைமைகள் மோசமடையும் எனவும் தெரிவித்துள்ளார்.
டெல்டா வைரஸ் தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.புதிய தொற்றாளர் எவரும் அடையாளம் காணப்படவில்லை.அதுமட்டுமல்ல வேறு பகுதிகளுக்கு டெல்டா வைரஸ் பரவியுள்ளதாக கண்டறியப்படவில்லை.
சகல விதத்திலும் சுகாதார துறை மாத்திரம் நிலைமைகளை கையாள முடியாது.எனவே மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஒரு வேளை வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்தால் விளைவுகள் மோசமாகும்.இந்தியாவின் நிலைமைகளை கருத்தில் கொண்டு எப்போதுமே நாம் செயற்பட்டாக வேண்டும்.பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் கூட சுகாதார கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்படும். மக்கள் அவற்றை நிராகரிக்க முடியாது. சுகாதார வழிமுறைகளை முழுமையாக பின்பற்றினால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். .