July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நெருக்கடி நிலையிலும் அரசாங்கத்தை கவிழ்க்கவே எதிர்க்கட்சி முயற்சிக்கின்றது; அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவிப்பு

நாடு நெருக்கடியான காலத்தில் இருக்கும்போது அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதன் மூலமாகவோ அல்லது அமைச்சர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதன் மூலமாகவோ நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மக்களின் பிரச்சினைகளை விடவும் அரசாங்கத்தை கவிழ்க்கவே எதிர்க்கட்சி முயற்சிக்கின்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொவிட் வைரஸ் தொற்றை அடுத்து நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன.இவை அனைத்துமே நாம் திட்டமிட்டு செய்யும் செயற்பாடுகள் அல்ல.உலகத்தில் சகல நாடுகளும் இந்த நெருக்கடி நிலைமைக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. வலுவான பொருளாதாரத்தை கொண்ட நாடுகளும் கூட பாரிய அளவில் வீழ்ச்சி கண்டுள்ளன.ஆகவே இதற்கு அரசாங்கமாக நாம் பொறுப்புக்கூற முடியாது எனவும் கூறியுள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து அமைச்சர் கம்மன்பில தனது பக்க நியாயத்தை முன் வைத்துள்ளார். ஜனாதிபதி, பிரதமர்,மத்திய வங்கி,வாழ்க்கை செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழு ஆகிய சகலவற்றிலும் ஆராய்ந்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு இருக்கையில் ஒருவர் மீது குற்றம் சுமத்தி அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவது நியாயமானதாக நாம் கருதவில்லை. நாட்டில் இருக்கும் பிரச்சினைகளுக்கு எல்லாம் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்து அரசாங்கத்தை வீழ்த்துவது என்றால் அது நியாயமற்ற செயற்பாடு என்றே நான் கருதுகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.