நாட்டை முடக்கி வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ள சூழலில் பயணக்கட்டுப்பாட்டை தளர்த்துவது ஆபத்தானது என வைத்திய,சுகாதார நிபுணர்கள் கொவிட் செயலணிக் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளனர்.
அத்தோடு, வைரஸ் தொற்று வேகமாக பரவக்கூடிய அச்சுறுத்தல் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடுகள் 21 ஆம் திகதி தளர்த்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையிலேயே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
கொவிட் வைரஸின் மிக மோசமான தொற்றாக கருதப்படுகின்ற பி.1.617.2 என அடையாளப்படுத்தப்படும் இந்தியாவில் பரவும் ‘டெல்டா’ வைரஸ் பரவல் இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்த விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என சுகாதார, வைத்திய நிபுணர்கள் இன்று காலையில் கூடிய செயலணிக்கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.
பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட வேண்டும் என்பதற்கு அரசாங்கத்திடம் இருக்கும் ஒரே சாட்டு நாட்டின் பொருளாதார நெருக்கடி என்ற காரணி மட்டுமே.
அதனை நாம் நிராகரிக்கவில்லை.ஆனால் மக்களின் உயிர் பாதுகாப்பு என்பது நாட்டின் பொருளாதார நெருக்கடியை விடவும் முக்கியமானது.
இப்போது பயணக்கட்டுப்பாட்டை தளர்த்துவதால், வைரஸ் தொற்று மிக வேகமாக பரவ இரண்டு நாட்கள் போதுமானதாக இருக்கும்.
எனவே நிலைமைகளை புரிந்து கொண்டு எமது கருத்துக்கு செவிமடுக்க வேண்டும் எனவும் சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.