இந்தியாவில் வேகமாக பரவி வரும் டெல்டா வைரஸ் திரிபினால் பாதிக்கப்பட்ட ஐவர் தெமட்டகொட பிரதேசத்தில் நேற்று (17) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து குறித்த பிரதேசத்திலிருந்து வைரஸ் வேறு இடங்களுக்கு பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்கு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பணிப்புரை விடுத்துள்ளார்.
இன்று (18) இடம்பெற்ற கொவிட் பரவல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் இந்த புதிய திரிபு வைரஸ் பரவலால் ஏற்படும் பிரச்சினை தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடல் இடம்பெற்றது.
அதற்கமைய, குறித்த திரிபு அடையாளம் காணப்பட்ட பிரதேசத்தை தனிமைப்படுத்தி அப்பகுதியில் வசிப்பவர்களிடமிருந்து பீ.சி.ஆர் மாதிரிகளை பெற்று பரிசோதனைகளை முன்னெடுக்கவுள்ளதாக இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், தொற்றாளர்களுடன் தொடர்பை பேணிய நபர்களை கண்டறிந்து பீ.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கும், அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் இந்த டெல்டா திரிபு பரவியுள்ளதா என கண்டறிய விசேட விசாரணைகளை முன்னெடுக்கவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனைக்குத் தேவையான அனைத்து பௌதீக மற்றும் மனித வளங்களையும் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.