பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் மொத்த விலை தொடர்பில் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் மக்களை விழிப்பூட்டும் திட்டத்தை தயாரிக்க அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நிலவும் கொரோனா தொற்று நோய் நிலைமை காரணமாக காய்கறிகள் மற்றும் பழங்களின் விலையை கட்டுப்படுத்தி, திறமையான விநியோகத்திற்கு தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் திறன் குறித்து நேற்று (17) அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
கொரோனா தொற்று நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட தொழில் முனைவோர் மற்றும் நுகர்வோர் ஆகிய இரு தரப்பினரையும் பாதுகாக்கும் ஒரு திட்டம் குறித்து கவனம் செலுத்துமாறு இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
நாடு முழுவதும் பொருளாதார மத்திய நிலையங்களில் காய்கறிகளின் விலைகள் ஒருவருக்கொருவர் மாற்றமடைந்துள்ளதன் காரணமாக அதிக விலைக்கு காய்கறிகளை கொள்வனவு செய்ய வேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ள நுகர்வோருக்கு நியாயம் வழங்குவது குறித்தும் அமைச்சர் இதன் போது கவனம் செலுத்தினார்.
மரக்கறி உற்பத்தி செய்யப்படாத காலப்பகுதி என்பதாலேயே மரக்கறி விலையில் உயர்வை அவதானிக்கக் கூடியதாக உள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
எவ்வாறாயினும், விவசாயிகளிடமிருந்து மரக்கறி மற்றும் பழ வகைகளை கொள்வனவு செய்யும் போது இடைத்தரகர்கள் மற்றும் விற்பனையாளர்களின் நிர்ணய விலை என்பவை காரணமாக மக்களுக்கு நியாயமான விலைக்கு கொள்வனவு செய்ய முடியாதுள்ளதாக அவர்கள் வெளிப்படுத்தினர்.
அத்தோடு, மரக்கறி தொகை விலை மற்றும் சில்லறை விலை குறித்து மக்கள் மத்தியில் காணப்படும் அறியாமையினால் அதிக விலைக்கு வியாபாரிகள் மரக்கறிகளை விற்பனை செய்ய ஏதுவாகின்றது.
எனவே பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் மொத்த விலை தொடர்பில் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் மக்களை விழிப்பூட்டும் திட்டத்தை தயாரிக்க அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சில்லறை விற்பனை நிலையங்களிலும், அனைத்து நடமாடும் விற்பனையாளர்களதும் விலை பட்டியலை புதுப்பித்து காட்சிப்படுத்தல் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் அதிகாரிகளிடம் கூறினார்.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலையீட்டின் கீழ் மேற்படி விலைக்கு அமைய விற்பனை செய்யாத விற்பனையாளர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
சதொச மற்றும் கூட்டுறவு நிலையங்கள் மூலம் மக்களுக்கு நியாயமான விலையில் காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்யும் மூலோபாயத்தை வகுக்க அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அறிவுறுத்தினார்.
மக்களுக்கு காய்கறி மற்றும் பழங்களை சலுகை விலையில் வழங்குவதற்காக முக்கிய நகரங்களில் சிறிய பொருளாதார மத்திய நிலையங்களை ஆரம்பிக்கவும் முன்மொழியப்பட்டது.