July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் சிங்கத்துக்கு கொரோனா வைரஸ் உறுதி!

தெஹிவளை மிருகக் காட்சி சாலையிலுள்ள சிங்கமொன்றுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆண் சிங்கமொன்றுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வன ஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த சிங்கம் கடந்த 3 நாட்களாக நோய் வாய்ப்பட்டிருந்தமையினால், மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப மருத்துவ பரிசோதனைகளுக்கமைய, இருமல் மற்றும் தொண்டை நோவினால் சிங்கம் அவதிப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

அதன் பின்னர் சிங்கத்தின் சளி மாதிரி பேராதனை கால்நடை மருந்துவ பீடத்துக்கு அனுப்பப்பட்டு, அது தொடர்பான மேலதிக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைய, குறித்த சிங்கத்துக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் 8 வருடங்களாக வசித்துவரும் ‘தோர்’ என்ற இந்த சிங்கம், கடந்த 2012 ஆம் ஆண்டு தென் கொரியாவிலிருந்து தேசிய மிருகக்காட்சி சாலைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த சிங்கத்துக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சிங்கத்துக்கு பொறுப்பாக இருந்த மூவரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதேபோல, கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட குறித்த சிங்கம் மிருகக்காட்சி சாலையிலுள்ள வேறொரு இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், தோர் வசித்து வரும் பகுதியில் மேலும் 5 சிங்கங்களும் வசித்து வருகின்றன.

இந்த விலங்குகளுக்கும் பீ.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக தெஹிவளை மிருகக்காட்சி சாலை தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.