July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பணம் கேட்டு மக்களை மிரட்டும் கும்பல்: அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல்!

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, தொலைபேசியூடாக மக்களை அச்சுறுத்தி பணத்தை பெற்றுக் கொள்ளும் மோசடி தொடர்பில் நாடு முழுவதும் பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இதுவரை சுமார் 50 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், வீடுகளிலுள்ள நிலையான தொலைபேசிகளுக்கு அழைப்பை மேற்கொண்டு, அடையாளம் தெரியாத நபர்கள் மக்களை அச்சுறுத்தி வருகின்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதாகவும், அதனை தவிர்ப்பதற்காக அருகிலுள்ள வங்கியில் பணத்தை வைப்பிலிடுமாறும் தொலைபேசியூடாக அடையாளம் தெரியாத சிலர் அச்சுறுத்தி வருவதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான தொலைபேசி அழைப்புகள் கிடைக்குமாக இருந்தால், வங்கியில் பணத்தை வைப்புச் செய்ய வேண்டாம் என பொலிஸ் பேச்சாளர் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், அவ்வாறு அழைப்புகள் வருமிடத்து அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்tபாடு செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.