இலங்கை மீனவர்கள் இந்தியக் கடற்படையினரால் தாக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளை இந்தியா மறுத்துள்ளது.
அந்தச் செய்திகள் முற்றுமுழுதாக உண்மைக்கு புறம்பானவை என்றும், இவ்வாறான எந்த ஒரு சம்பவமும் இடம்பெறவில்லை என்பதனை உறுதியாக கூறிக்கொள்வதாகவும் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இலங்கை மீனவர்கள் இந்திய கடற்படையினரால் தாக்கப்பட்டிருப்பதாக ஜூன் 17ஆம் திகதி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இது குறித்து இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பேச்சாளரினால் இன்று காலை அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், குறித்த செய்திகள் அனைத்தும் முற்றுமுழுதாக உண்மைக்கு புறம்பானவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மிகவும் உயர்ந்த ஒழுக்கத்தையும் தொழில்திறனையும் கடைப்பிடித்து வரும் இந்திய கடற்படை குற்றமற்ற வகையில் தமது பொறுப்புக்களை நிறைவேற்றி வருகின்றது. என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் இருதரப்பு பொறிமுறைகள் மற்றும் புரிந்துணர்வுகள் ஆகியவற்றின் ஊடாக இலங்கை இந்திய மீனவர்கள் சம்பந்தமான சகல பிரச்சனைகளுக்கும் ஒரு மனிதாபிமான அடிப்படையில் தீர்வினை காண்பதற்கு இந்தியா மிகுந்த உறுதிப்பாட்டுடன் உள்ளது என்றும் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பேச்சாளர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.