இலங்கையில் பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கையை தொடர்ந்தும் முன்னெடுக்கக் கூடிய வகையில், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை தடையின்றி வழங்குவது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் கட்டளையின் பிரகாரம் வெளியிடப்பட்டுள்ள குறித்த வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி செயலாளர் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த வர்த்தமானி அறிவிப்பில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் 10 சேவைகள் தொடர்பான தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அவற்றில் துறைமுகங்கள், பெற்றோலிய தயாரிப்புக்கள், சுங்கம் மற்றும் ரயில்வே திணைக்களம் மற்றும் போக்குவரத்து சபை ஆகிய நிறுவனங்கள் தொடர்பில் கூறப்பபட்டுள்ளன.
அத்துடன், அனைத்து மாவட்ட செயலகங்கள் உள்ளிட்ட நிருவாக பிரிவுகள், மத்திய வங்கி உள்ளிட்ட அனைத்து காப்புறுதி சேவைகளும், கூட்டுறவு சதோச போன்ற மக்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் நுகர்வோர் பொருட்கள் விநியோகத்துடன் தொடர்புடைய நிறுவனங்களும் வர்த்தமானி அறிவிப்பில் உள்ளடகப்பட்டுள்ளன.