உள்ளுராட்சி மன்றங்களால் நியமிக்கப்படும் அட்டவணைப்படுத்தப்படாத ஆளணியை பல்பணி அபிவிருத்திச் செயலணி திணைக்களம் ஊடாக நிரப்ப முயற்சிக்கப்படுவதை வலிகாமம் கிழக்கு பிரதேச சபை நிராகரித்துள்ளதுடன், தொடர் அழுத்தம் காணப்பட்டால் நீதிமன்றம் செல்லவும் முடிவெடுத்துள்ளதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
வடக்கு மாகாண திணைக்களங்களில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் பயிற்சி பெற்ற 105 பேரை ஆரம்ப நிலை சேவை தேவையின் நிமிர்த்தம் தற்காலிக அடிப்படையில் உள்வாங்குவதற்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்களுக்கு பிரதம செயலாளர் கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.
வடக்கு மாகாண உள்ளுராட்சி திணைக்களம் 40 பயிலுநர்களை முதற்கட்டமாக உள்ளராட்சி மன்றங்களுக்கு பகிர்ந்தளித்துள்ளது. இது தொடர்பில்,யாழ். மாநகர சபை கடிதம் ஒன்று அனுப்பப்பட்டு அதன் பிரதிகள் ஏனைய பிரதேச சபைகளுக்கும் முகவரியிடப்பட்டிருந்தன. இந் நிலையில் நியமனக் கடிதங்கள் எதுவும் அற்ற நிலையில் குறித்த பயிலுனர்கள் பிரதேச சபைகளுக்கு அனுப்பப்பட்டதுடன், ஏனைய வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு மூன்று பயிலுனர்கள் அனுப்பப்பட்டனர்.
இதனையடுத்து,வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் பிரதேச சபையின் கூட்டத்தினைக் கூட்டியிருந்தார்.
அக் கூட்டத்தில் தவிசாளர், உள்ளுராட்சி மன்றங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட அட்டவணைப்படுத்தப்படாத ஆளணி நியமனங்களை மத்திய அரசின் தாபனங்கள் அரசியல் காரணங்களுக்காக கையாள்வது ஏற்றுக்கொள்ளமுடியாது.ஆளணி நியமனம் தொடர்பில் உள்ளுராட்சி மன்றங்களால் ஏற்கனவே பகிரப்பட்டு கேள்விக்கு இடமின்றி அதிகாரம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ளது.அதனை தற்போது கேள்விக்குட்படுத்துகின்றனர்.எமது சபைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு பகுதி பகுதியாக நாம் உரிய அனுமதிகளை பெற்று நேர்முகத் தேர்வுகளை நடத்தி தெரிவு செய்யப்பட்டவர்களது பெயர் விபரங்களையும் பகிரங்கப்படுத்திவிட்டோம்.ஆனால் அந் நியமனங்களுக்கு முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதி தேவை என வடக்கு மாகாண சபை கருதியமையினால் அங்கு அனுப்பப்பட்டிருக்கின்றது.நியமனத்திற்கு தெரிவானவர்கள் நியமனத்தினை விரைவுபடுத்த மனித உரிமை ஆணைக்குழுவைக் கோரியுள்ளனர்.
எனினும் அது அரசாங்கத்தின் அனைத்து ஆட்சேர்ப்புகளையும் தற்காலிகமாக நிறுத்துதல் என்ற காரணத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. எமது சபைகளில் அங்கீகரிக்கப்பட்ட ஆளணி எண்ணிக்கை உரியவாறு நிரப்ப முடியாமை காரணமாக நாம் வெளிவாரியாக சனசமூக நிலையங்கள் ஊடாக பணியாளர்களை பெற்றே மக்களுக்கு சேவை ஆற்றுகின்றோம்.இவ்வாறாக சபைகளில் பலர் வருடக்கணக்கில் கடின பணியை ஆற்றி வருகின்றனர்.அவ்வாறு பணியாற்றுபவர்களுக்கு நேர்முகத் தேர்வில் கூட 10 புள்ளிகள் வழங்குகின்றோம்.
இவர்களின் நியமனங்களை அரசாங்கம் ஏற்பதை விடுத்து, புதிதாக முறையற்ற நியமனங்களை மேற்கொள்வதை நாம் மறுக்கின்றோம். புதிதாக வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படுவதை நாம் வரவேற்கின்றோம்.ஆனால் அந் நியமனங்கள் எமது சபையின் அதிகாரங்களை மீறாத வகையில் கடந்த காலத்தில் எமது சபைக்காக பணியாற்றுபவர்களை தூக்கி வீசாத வகையில் அமைய வேண்டும்
ஏற்கனவே நிதி அமைச்சு ஆரம்ப நிலை சேவை வகுப்பிற்கு தேவையான பணியாளர்களை பல்பணி அபிவிருத்தி செயலணி வாயிலாக நியமிக்க கடந்த ஆண்டு சுற்றறிக்கை வெளியிட்டிருந்தபோதும் அது உள்ளுராட்சி மன்றங்களுக்கு ஏற்றது என சபை கருதவில்லை.எம் மீது தொடர் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டால் நீதிமன்றம் செல்ல வேண்டியேற்படும் எனவும் தவிசாளரால் எடுத்துரைக்கப்பட்டது.
இந் நிலையில் ஆளணியை நிரப்புதல் தொடர்பாக நேர்முக தேர்வுகள் இடம்பெற்றுள்ள நிலையில்,புதிதாக அனுப்பப்பட்டுள்ள குறித்த பயிலுனர்களை அனுமதிப்பதில்லை.நாம் ஏற்கனவே நேர்முக தேர்வுகளை நடத்தியிருக்கும் நியமனத்திற்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்க தீர்மானம் எடுக்கப்பட்டது.
மேலும் உள்ளுராட்சி மன்றத்திற்கு பகிரப்பட்டு இதுவரைகாலமும் தடையின்றி பிரயோகிக்கப்பட்ட அட்டவணைப்படுத்தப்படாத நியமனங்களை அதிகாரத்தை உள்ளுராட்சி மன்றங்கள் பிரயோகிக்க இடமளிக்கப்படவேண்டும் எனவும் இல்லையேல் பொருத்தமான நீதிமன்றத்தை நாடவும் முடிவு எடுக்கப்பட்டது.இத் தீர்மானங்களுக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தவிர்ந்த சகல கட்சிகளும் ஏகமனதாக அங்கீகாரமளித்தனர்.