January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வடக்கு வைத்தியசாலைகளை அரசுக்கு வழங்க முடியாது’; சி.வி.கே.சிவஞானம் தெரிவிப்பு

வடக்கு மாகாண சபை நிறைவேற்றிய சுகாதார நியதிச் சட்டத்துக்கு அமைவாக, மாகாண நிர்வாகத்துக்கு உட்பட்ட வைத்தியசாலைகளை மத்திய அரசிடம் கையளிக்க முடியாது என்று வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

இந்த விடயத்தையும் சுட்டிக்காட்டி வடக்கு மாகாண ஆளுநருக்கு விரைவில் கடிதம் அனுப்பப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாகாணத்துக்கு உட்பட்ட 9 வைத்தியசாலைகளை மத்திய அரசு வசமாக்கும் தீர்மானத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்ட பொது வைத்தியசாலைகள் இதன் ஊடாக மத்திய அரசு வசமாகவுள்ளன.

இது தொடர்பில், மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவரான சி.வி.கே.சிவஞானத்திடம் கேட்டபோது,

“எமது மாகாண சபை சுகாதார நியதிச் சட்டத்தை நிறைவேற்றியிருந்தது. அந்தச் சட்டத்தில் இந்த வைத்தியசாலைகள் தெளிவாக எங்களுக்குரியன என்று சொல்லப்பட்டுள்ளது.

எமது மாகாணத்துக்கு உட்பட்ட வைத்தியசாலைகளை மத்திய அரசு தன் வசப்படுத்த முடியாது.

குறிப்பிட்ட வைத்தியசாலைகளை மேம்படுத்தி அபிவிருத்தி செய்ய விரும்பினால் அதற்குரிய நிதியை மாகாணத்துக்கு மத்திய அரசு வழங்கட்டும்.இந்த விடயங்களைக் குறிப்பிட்டு வடக்கு மாகாண ஆளுநருக்கு விரைவில் கடிதம் அனுப்பவுள்ளேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.