January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய மீனவர்கள் நடத்திய போராட்டத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்; யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கம்

கடலில் தொடர்ந்தும் பேருந்துகளை போடுவதற்கான ஏற்பாடு இன்னும் தொடர வேண்டுமெனவும் இந்திய மீனவர்களின் போராட்டத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தில் நடந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய மீனவர்கள் இலங்கை அரசுக்கு எதிராக வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற பேருந்துகளை கடலுக்குள் போடும் திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு மீனவர்கள் சார்பிலும் யாழ்.மாவட்ட மீனவர்கள் சார்பிலும் குறிப்பிட்ட சில இந்திய மீனவர்களின் போராட்டத்தை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்

இலங்கை அரசாங்கமும் கடற்றொழில் அமைச்சரும் வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் மீன் வளத்தையும் அதிகரிக்கும் நோக்கோடு பல்வேறு கட்ட ஆய்வுகளையும் நீண்டகால முயற்சிகளையும் மீனவ அமைப்புகளின் கோரிக்கையையும் ஏற்று இலங்கை கடல் எல்லைக்குள் மீன் வளத்தை அதிகரிக்கும் நோக்கோடு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக திருகோணமலை பிரதேசத்திலும் தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தின் காங்கேசன்துறை மற்றும் நெடுந்தீவை அண்மித்த பகுதியில் பேருந்துகளை இலங்கை கடல் எல்லைக்குள், இலங்கை மீனவர்களுக்கு குறிப்பாக யாழ்.மாவட்ட மீனவர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் எங்களுடைய கடல் வளத்தைப் பாதுகாத்து மீன் வளத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்கோடு கடலுக்குள் போடப்படும் செயற்பாடு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது .

அந்த செயற்பாட்டினை மேற்கொள்வதற்கு இலங்கை அரசாங்கமும் கடற்றொழில் அமைச்சும் எடுத்த நடவடிக்கையை மாவட்ட மீனவ சமூகமும் கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களும் வரவேற்று நிற்கின்றோம்.

ஆனால் இந்திய மீனவர்களென குறிப்பிட்ட சில மீனவர்கள் இந்த போராட்டத்தை செய்கின்றார்கள்.பெரும்பகுதியான இந்திய மீனவர்கள் மேற்படி போராட்டத்திற்கு ஆதரவு இல்லை என்று எங்களுக்கு தெரிவித்திருக்கின்றார்கள்.

தமிழ்நாட்டின் கடலோர பிரதேசங்களில் இது போன்ற பழைய இரும்புகள் கடலுக்குள் போடப்பட்டு இயற்கையான பவளப்பாறை ஒத்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதனை அறியாதவர்கள் போன்று இந்த போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.ஆனால் யுத்தத்திற்கு பின்பு எமது கடல் வளத்தை இந்திய இழுவைப்படகுகள் பவளப்பாறைகளையும் கடல் வளங்களையும் அழிக்கும் இந்த செயற்பாட்டை இலங்கை அரசாங்கம் கண்டித்து நிறுத்த வேண்டும்

எமது கோரிக்கையை ஏற்று கடலில் தொடர்ந்தும் பேரூந்துகளை போடுவதற்கான ஏற்பாடு இன்னும் தொடர வேண்டும். குறிப்பாக யாழ்.மாவட்ட கடற்தொழில் வளத்தை பாதுகாக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிக்கு மீனவ சமூகம் பூரண ஆதரவை தெரிவித்துக் கொள்கின்றோம்.இதுபோன்று நெடுந்தீவு, அனலைதீவு, எழுவைதீவு பிரதேசங்கள் அண்மித்து கடல் எல்லைப் பகுதியிலேயே பேருந்துகள் போடப்படுவதை நாங்கள் வரவேற்கின்றோம். அந்த மீனவ அமைப்புகள் சிலர் ஆதரிக்கின்றார்கள், சிலர் கடல் வளத்திற்கு இது பாதுகாப்பில்லை என்று கூறியிருந்தார்கள் .அது தொடர்பான விளக்கத்தை நாம் எழுவைதீவு, அனலைதீவு பிரதேசத்திற்கு தெரியப்படுத்தினோம்.அதன் பின்னர் இந்தத் திட்டத்தை வரவேற்றிருக்கிறார்கள்.

எந்த பாதிப்பும் வராமல் நீண்ட ஆய்வின் பின்னர் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.எனவே இந்த திட்டத்தை தொடர்ந்து மருதங்கேணி பிரதேசம் தொடக்கம் கச்சதீவு வரை பேருந்து இறக்கும் செயற்பாடு தொடர்ந்து நடைபெறவேண்டுமென யாழ்.மாவட்ட கடற்றொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனம் சார்பாக கேட்டுக் கொள்வதோடு, இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக நுழைய வேண்டாம் எனவும் கேட்டு கொள்கிறோம்.

இலங்கை தேசத்தில் நாங்கள் கடல் வளத்தை பாதுகாக்க எடுக்கும் இந்த முயற்சிக்கு தமிழ்நாட்டு மீனவர்கள் எங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டுமே தவிர, எங்களுடைய வாழ்வாதாரத்தை, எதிர்கால சந்ததியை குழப்பும் செயற்பாட்டை தமிழ்நாட்டு மீனவர்கள் நிறுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம் .

ஆர்ப்பாட்டம் செய்த மீனவர்களும் இது போன்ற செயற்பாடுகளை நிறுத்த வேண்டும்.இல்லையேல் அதற்கு எதிராக யாழ்.மாவட்ட மீனவர்கள் போராடும் சூழல் உருவாகும். இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்களை வராமல் தடுப்பதற்கு கடற்தொழில் அமைச்சர் தொடர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அண்மை நாட்களாக தீவக பிரதேசங்களிலே கடல் உயிரினங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்குகிறது.இலங்கையின் ஏனைய பிரதேசங்களிலும் கடல்வாழ் உயிரினங்கள் இறந்து கொண்டிருக்கின்றன.இதன் காரணமாக மீனவர்கள் அச்சப்படுகின்றனர். மீனை சாப்பிட நுகர்வோரும் அச்சப்படுகின்ற சூழல் காணப்படுகின்றது.இதனை தெளிவுபடுத்தும் முகமாக கடற்தொழில் அமைச்சு ஆய்வினை மேற்கொண்டு தெளிவுபடுத்தலொன்றை மேற்கொள்ளுமாறு நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.