July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அத்தியாவசிய பொருட்களின் விலையை சீராக வைத்திருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்’; அமைச்சர் பந்துல குணவர்தன

Photo: Facebook/ Consumer Affairs Authority

உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலையை சீராக வைத்திருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஒருகொடவத்தையில் உள்ள சதொச களஞ்சியசாலை வளாகத்திலிருந்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகள் விநியோகிக்கப்படுவதை அமைச்சர் இன்று (17) ஆய்வு செய்தார்.

இதன்போது ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் பேசுகையில்,

உலகளாவிய உணவுப் பொருட்களுக்கான விநியோக சங்கிலியின் விலை சுமார் 300 வீதம் அதிகரித்துள்ள நிலையில், ஜனாதிபதி உட்பட தற்போதைய அரசாங்கம் இலங்கை மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லாமல் குறைந்த விலையில் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

அதேபோல, அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் இறக்குமதி செய்ய தேவையான வசதிகள் இறக்குமதியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் கூறினார்.

அதேபோல், உலகளாவிய பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பொருட்களின் விநியோக சங்கிலியின் நெருக்கடி போன்ற மிகவும் சிக்கலான சூழ்நிலையை எதிர்கொள்ளும் ஒரு நாடு என்ற வகையில், இலங்கை சந்தையில் அத்தியாவசிய  பொருட்களை பற்றாக்குறை இல்லாமலும், நுகர்வோரை பாதிக்காமல் விலைகளை பராமரிக்கவும் அரசாங்கம் ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

உலக சந்தையில் அதிகரித்து வரும் விலைகள் மற்றும் கொரோனா வைரஸின் தாக்கத்தினால் அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான செலவு காரணமாக உணவுப் பொருட்களை இறக்குமதி செய்கின்ற நேரடி இறக்குமதியாளர்கள் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.

இதன் காரணமாக, நாங்கள் அவர்களுடன் கலந்துரையாடி விலை உயர்வு தேவைப்படும் பொருட்களை தேர்ந்தெடுத்து அந்த விலைகளை மிக குறைந்த விலையில் வைத்திருக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இதனிடையே, எரிவாயு விலை தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், உலக சந்தை நிலைமையை கருத்தில் கொண்டு எரிவாயு விலையை அதிகரிக்க உள்ளூர் எரிவாயு நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.

எவ்வாறாயினும், குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு எரிவாயுவை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து தேவையான அறிவுறுத்தல்களை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

அதன்படி, அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, மஹிந்த அமரவீர, உதய கம்மன்பில மற்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோர் அடங்கிய அமைச்சரவை உப குழுவால் எரிவாயுவை குறைந்த விலையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக என்று அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.