முன்பள்ளிகளை போட்டித்தன்மை மிகுந்த கல்வி வழங்கும் பாடசாலையாக மாற்றாமல் பிள்ளைகளுக்கு சுற்றுச்சூழலை அனுபவிக்க இடமளியுங்கள் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ முன்பள்ளி ஆசிரியர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2500 ரூபாய் கொடுப்பனவை பெற்றுக்கொடுக்கும் ‘குரு அபிமானி’ தேசிய நிகழ்வு கொழும்பு அலரி மாளிகையில் இன்று பிரதமர் தலைமையில் நடைபெற்றது.
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, அறநெறிப் பாடசாலைகள், கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த ஆகியோர் இதன்போது ஆரம்பகால குழந்தை பருவ கல்வி குறித்த தேசிய கொள்கைத் திட்டத்தை பிரதமரிடம் கையளித்தனர்.
குரு அபிமானி தேசிய வேலைத்திட்டத்தை மையமாகக் கொண்டு முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பிரதமர் மற்றும் பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோரினால் இதன்போது கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.
சுபீட்சத்தின் நோக்கு திட்டத்திற்கமைய அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் நிறுவப்பட்டுள்ள சுபீட்சத்தின் முன்பள்ளி கட்டுமானத்திற்கான 25 இலட்சம் ரூபாய் மற்றும் 1500 முன்பள்ளிகளின் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 6 இலட்சம் ரூபாய் நிதி வழங்கலும் இதன்போது இடம்பெற்றது.
முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, அறநெறிப் பாடசாலைகள், கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் கீழ் இவ்வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், முழு நாடும் கொரோனா தொற்றுநோயை எதிர்கொள்ளும் நேரத்தில் முன்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான முன்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளின் பெற்றோரிடமிருந்து குறைந்த பணத்துடன் பராமரிக்கப்படுகிறார்கள். தற்போது அப்பணம் கிடைப்பதில்லை. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, இந்த முன்பள்ளி ஆசிரியரை ஒரு நிரந்தர சம்பளம் பெறும் தொழில்முறை நிலைக்கு கொண்டு வர முயற்சிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாங்கள் வழங்கும் 2500 ரூபாவானது சம்பளம் அல்ல. ஒரு கொடுப்பனவு மட்டுமே, இந்த பணம் வாழ போதுமானதாக இல்லை என்பதை நாங்கள் அறிவோம். முறையான பயிற்சிக்குப் பின்னர் முன்பள்ளி ஆசிரியருக்கு நிரந்தர மாத சம்பளத்தை அமைப்பதற்கான ஆரம்பம் இதுதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
முன்பள்ளிகளை மீண்டும் தொடங்கும் போது, அந்த மலர்களைப் போன்ற குழந்தைகள் உங்களிடம் திரும்பி வருவார்கள். குழந்தைகளுக்காக வேலை செய்யுங்கள். முன்பள்ளியை போட்டி கல்வியை வழங்கும் மற்றொரு பாடசாலையாக மாற்ற வேண்டாம். இந்த சூழலை குழந்தைகள் அனுபவிக்கட்டும். அவர்கள் தங்கள் உலகில் வாழட்டும் என்று கூறினார்.