January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நம்பிக்கையில்லா பிரேரணையில் உள்ள அனைத்து விடயங்களும் ஆதாரமற்றவை’; அமைச்சர் உதய கம்மன்பில!

வலு சக்தி அமைச்சராக தனக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையெழுத்திட்ட நம்பிக்கையில்லா பிரேரணையில் உள்ள அனைத்து விடயங்களும் ஆதாரமற்றவை என்று வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அத்துடன், எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை சிறந்த முறையில் வெற்றி கொள்ள என்னால் முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் இன்று (17) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

எனக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சிறுவன் ஒருவனின் கடிதம் போன்று பல பிழைகள் கொண்ட ஒரு ஆவணமாகும். எரிபொருள் விலையை அதிகரிப்பது நிதி அமைச்சரின் ஒப்புதலுடன் மட்டுமே செய்ய முடியும். அமைச்சரவை அனுமதி தேவையில்லை.

நான் வலு சக்தி அமைச்சராக 2020 ஆகஸ்ட் மாதம் பதவியேற்றுக் கொண்டேன். ஆனால் நம்பிக்கையில்லா பிரேரணையில் 2020 ஜனவரி மாதம் என குறிப்பிட்டுள்ளதை எதிர்க்கட்சிக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

எனவே, நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டவர்கள் தங்களுக்கு சட்டம் பற்றி எதுவும் தெரியாது என்பதை நாட்டிற்கு காட்டியுள்ளனர் என்பதை இதன்மூலம் அறிந்து கொள்ள முடியும்.

எனவே நம்பிக்கையில்லா பிரேரணை என்ற பெயரில் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு புண்ணியம் கிடைக்கட்டும் என அமைச்சர் தெரிவித்தார்.

எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் வலு சக்தி  அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (16) நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.