
இலங்கை முழுவதும் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாட்டை ஜுன் 21 ஆம் திகதி தளர்த்துவதா? இல்லையா? என்பது குறித்து இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என்று கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியான இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இது குறித்து நாளைய தினத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள கொவிட் தடுப்புச் செயலணிக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
மே 21 ஆம் திகதி நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாட்டை ஜுன் 21 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்துவதற்கு கடந்த வாரத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில், பயணக் கட்டுப்பாட்டை இப்போதைக்கு தளர்த்த வேண்டாம் என்று விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எனினும் இதுகுறித்து இதுவரையில் முடிவெடுக்கவில்லை. நாட்டின் கொவிட் தொற்றுப் பரவல் நிலைமை குறித்து மீளாய்வு செய்த பின்னரே முடிவெடுக்கப்படும் என்றும், இதன்படி நாளை காலை கூடும் செயலணிக் கூட்டத்தில் ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என்றும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.