கேகாலை மாவட்டத்தின் எட்டியாந்தோட்டை லெவண்ட் தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்ட மக்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக உரிமைக்கான போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.
மண்சரிவு அபாயம் காரணமாக அந்தத் தோட்டத்தில் லயன் குடியிருப்புகளில் வசித்த 25 குடும்பங்கள் தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தமது அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அந்த மக்களுக்கு எதிராக தோட்ட அதிகாரி எட்டியாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டை தொடர்ந்து, பயணத் தடைக்கு மத்தியில் பாதிக்கப்பட்ட மக்கள் 20 கிலோமீட்டர் தூரம் நடந்து பொலிஸ் நிலையத்திற்கு சென்று வாக்குமூலம் வழங்கிய பின்னர், மீண்டும் 20 கிலோ மீட்டர் தூரம் நடந்தே தோட்டத்திற்குச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கு காணிகளை வழங்கி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்குமாறு வலியுறுத்தி தமது பிள்ளைகளுடன் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
காற்று, மழைக்கு மத்தியிலும் சிறிய கூடாரத்திற்குள் பிள்ளைகளுடன் வாழ்வது அச்சுறுத்தலானது எனவும், இதனால் எங்களுக்கு நிரந்தமான இருப்பிடங்களை வழங்குமாறு அதிகரிகளை கேட்டுக்கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.