July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”இருவார காலத்திற்கு நீடிப்பதைத் தவிர மாற்று வழியில்லை”

இலங்கை முழுவதும் பயணக்கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் மக்களின் செயற்பாடுகள் திருப்திகரமாக அமையவில்லை என்று சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படுமாக இருந்தால் நாடு இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்படும் என்று அவர்கள் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளனர்.

இதனால் இப்போதுள்ள நிலையில் பயணத்தடையை மேலும் இருவார காலம் நீடிப்பதை தவிர மாற்றும் வழியில்லை என்றும் சுகாதார நிபுணர்கள் அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை 21 ஆம் திகதியுடன் தளர்த்த அரசாங்கம் ஆராய்ந்து வருகின்ற நிலையில், கொவிட் செயலணிக் கூட்டத்திலும் அது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அவசியம் ஏற்படின் 28 ஆம் திகதி வரையில் பயணக்கட்டுப்பாட்டை நீடிக்க முடியும் எனவும், ஆனால் இறுக்கமான விதத்தில் அதனை நடைமுறையைப்படுத்த முடியாது எனவும் அரசாங்கம் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அரசாங்கத்தின் தீர்மானத்துடன் முரண்பட்டுள்ள சுகாதார, வைத்திய நிபுணர்கள் இப்போது நாட்டை திறக்கும் தீர்மானத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த மூன்று வாரத்தில் கொவிட் வைரஸ் தொற்று குறைவடைந்துள்ளமை உண்மையே, ஆனால் அதற்கு பயணக்கட்டுப்பாடு விதித்தமையே பிரதான காரணமாகும். ஆனால் பயணக்கட்டுப்பாட்டு காலத்தில் மக்களின் செயற்பாடுகள் நூறு வீதம் திருப்தியானதாக அமையவில்லை என்று சுகாதார நிபுணர்கள் அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளனர்.

இப்போது நிலைமைகள் ஓரளவு கட்டுப்பாட்டில் உள்ளது, ஆனால் வைரஸ் தொற்று அச்சுறுத்தல் நிலை இல்லையென கருதிவிடக்கூடாது. நாட்டின் கொவிட் மரணங்கள் இன்னமும் குறையவில்லை. ஆகவே இவ்வாறான நிலையில் நாட்டை உடனடியாக திறப்பது ஆபத்தானது என்பதை விசேட வைத்திய நிபுணர்களான பத்மா குணரத்ன, சந்திம ஜீவந்தர ஆகியோர் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், இப்போது அரசாங்கம் நாட்டினை திறக்குமானால் அதற்கு எமது ஆதரவை வழங்க முடியாது, மக்களின் நிலைமைகளை கருத்தில் கொண்டு நாட்டை இன்னும் இருவார காலத்திற்கு முடக்குவதே அரசாங்கத்திற்கு இருக்கும் ஒரே தெரிவாகும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

நாட்டை பாதி திறந்தும் பாதி மூடியும் வைரஸ் பரவலை எவ்வாறு கட்டுப்படுத்துவது. ஆகவே அரசாங்கம் இன்னும் சற்று பொறுமையாக இருந்து சுகாதார தரப்பினர் கோரிக்கைகளுக்கு செவிமடுக்க வேண்டும் என்பததையும் வைத்திய நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.