July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேல்முறையீட்டு நீதிமன்றம் ஷானி அபேசேகரவுக்கு பிணை வழங்கியதனை வரவேற்றுள்ள அம்னெஸ்டி இன்டர்நேஷனல்

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரிகளை இலக்கு வைப்பதற்கு நீதிமன்றம் அனுமதிக்காது என்ற நம்பிக்கையை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் உதவிப் பொலிஸ் பரிசோதகர் சுகத் மென்டிஸ் ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டிருப்பதன் மூலம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

குற்றமிழைத்தமையை நிரூபிக்கக்கூடிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாதவிடத்து, ஷானி அபேசேகர மீதான அனைத்து விசாரணைகளையும் நீதிமன்றம் முடிவிற்கு கொண்டுவரும் என்று நம்புவதாகவும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

இது குறித்து அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் உதவிப் பொலிஸ் பரிசோதகர் சுகத் மென்டிஸ் ஆகியோருக்கு பிணை வழங்குவதற்கான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்மானம் வரவேற்கத்தக்கது.

அதேவேளை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகளை இலக்குவைப்பதற்கு நீதிமன்றம் அனுமதியளிக்காது என்ற நம்பிக்கையையும் தந்திருக்கிறது.

ஷானி அபேசேகர குற்றமிழைத்தமையை நிரூபிக்கும் வகையில் ஏற்றுக்கொள்ளத்தக்க சான்றுகள் முன்வைக்கப்படாத பட்சத்தில், அவர் மீதான அனைத்து விசாரணைகளையும் நீதிமன்றம் முடிவிற்குக் கொண்டுவரும் என்று நம்புகின்றோம்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் ஷானி அபேசேகர மற்றும் சுகத் மென்டிஸ் ஆகிய இருவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகினர். இதன்போது ஆரம்பத்தில் அவர்களுக்கு வழங்குவதற்கு மறுக்கப்பட்ட வைத்தியசாலை சிகிச்சை உள்ளடங்கலாக முறையான மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நாம் வலியுறுத்தியிருந்தோம்.

போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் உள்ளடங்கலாக முக்கிய வழக்கு விசாரணைகளில் ஈடுபட்டமைக்காக பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள, இடமாற்றம் செய்யப்பட்டுள்ள, கைது செய்யப்பட்டுள்ள, பதவி நீக்கப்பட்டுள்ள அதிகாரிகள் தொடர்பில் நாம் கவலையடைகின்றோம். இவர்களில் பலர் இனிமேலும் பொறுப்புக்கூறலை கோர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதுமாத்திரமன்றி மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உண்மை, நீதி, இழப்பீடு ஆகியவற்றை உறுதிப்படுத்துவதும் புறக்கணிப்பிற்குள்ளாகியுள்ளது என்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அப்பதிவில் சுட்டிக்காட்டியுள்ளது.