இலங்கையில் முழு ஆடை பால்மா பாக்கெட்டின் விலையை அதிகரிப்பது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு பால் மா இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
400 கிராம் பால்மா பாக்கெட் ஒன்றின் விலையை 140 ரூபாவினாலும், 1 கிலோகிராம் பால்மா பாக்கெட் ஒன்றின் விலையை 350 ரூபாவினாலும், உயர்த்துவதற்கு பால் மா இறக்குமதியாளர்கள் கோரியுள்ளனர்.
நாட்டில் கையிருப்புள்ள பால்மா 4 முதல் 6 வாரங்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ள நிலையில், புதிதாக இறக்குமதி செய்யப்பட உள்ள பால்மா தொடர்பில் இந்த விலை நிர்ணயம் கோரப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பால்மா விலையை அதிகரிக்கும் கோரிக்கையை, இறக்குமதியாளர்கள் 2021 மார்ச் முதல் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு முன்வைத்து வருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உரிய பதில் கிடைக்காததன் காரணமாக சில இறக்குமதியாளர்கள் பால்மா இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டதாகவும் மற்றவர்கள் மே மாதம் முதல் தமது இறக்குமதியை 30-40 சதவிகிதத்தினால் குறைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் படி, 400 கிராம் பால்மா பாக்கெட் ஒன்றின் சில்லறை விலை 520 ரூபாவாகவும் 1 கிலோகிராம் பால்மா பாக்கெட் ஒன்றின் சில்லறை விலை 1, 295 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அதிகரிப்பு விற்கப்படும் பொருட்களின் மொத்த விலையில் 32 சதவீதமாகும்.
நாட்டின் பால் தேவையின் மூன்றில் இரண்டு பங்கு நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால் மாவினால் பூர்த்தி செய்யப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள இறக்குமதியாளர்கள், புதிய இறக்குமதிகளை மேற்கொள்ள வேண்டுமாயின் விலை அதிகரிப்பு மிக முக்கியமானது எனவும் தெரிவித்துள்ளனர்.