July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”ஆயிரம் ரூபாவை காட்டி தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றாதே”: மஸ்கெலியாவில் போராட்டம்!

ஆயிரம் ரூபா சம்பளம் வேண்டுமென்றால் 26 கிலோ தேயிலை கொழுந்து பறிக்குமாறு தோட்ட நிர்வாகம் கட்டளையிடுவதுடன், வேலை நேரத்தையும் அதிகரித்துள்ளதாக தெரிவித்து மஸ்கெலியாவில் ‘லங்கா’ தோட்டத் தொழிலாளர்கள் இன்று கனவயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என சம்பள நிர்ணய சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டதுடன், அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டது.

இதன்போது, முன்னர் செய்த வேலையின் அளவுக்கே இந்த சம்பள உயர்வு வழங்கப்படுகின்றது என்றும் மேலதிகமாக எதையும் செய்ய வேண்டியதில்லை என கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.

எனினும், ஒரு மாதம் மட்டுமே எமக்கு ஆயிரம் ரூபா வழங்கப்பட்டது. அதன்பின்னர் உரிய வகையில் சம்பளம் வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டும் லங்கா தோட்டத் தொழிலாளர்கள், அதற்கான காரணங்களையும் குறிப்பிட்டுள்ளனர்.

” ஆயிரம் ரூபா கிடைப்பதற்கு முன்னர் நாட் சம்பளத்துக்கு பெண்கள் 16 கிலோ கொழுந்து எடுக்க வேண்டும். தற்போது அந்த அளவு 20 கிலோவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு மூன்று தடவைகள் கொழுந்து அளக்கப்படும். ஒரு தடவைக்கு 2 கிலோ கழிக்கின்றனர். மூன்று தடவைக்கு ஆறு கிலோவை கழிக்கின்றனர். அப்படியானால் ஆயிரம் ரூபா சம்பளத்துக்கு 26 கிலோ பறிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்” என்று அவர்கள் கூறியுள்ளனர்.

This slideshow requires JavaScript.

இதேவேளை ஆண் தொழிலாளர்கள் காலை 8 மணிக்குச்சென்று பிற்பகல் ஒரு மணிக்கு வந்துவிடுவர். தற்போது அவர்களுக்கான வேலை நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தோட்ட நிர்வாகத்தின் இந்த அணுகுமுறையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, அரசாங்கமும், தொழிற்சங்கங்களும், தொழில் அமைச்சும் தலையிட்டு எமக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.