July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் அதிகளவு அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுப்பு: சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்

இலங்கையில் விரைவான அன்டிஜன் பரிசோதனைகள் அதிகளவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதேபோல, பி.சி.ஆர் பரிசோதனைகள் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, நேற்று (15) 18,257 பி.சி.ஆர் பரிசோதனைகளும், 3,979 விரைவான அன்டிஜன் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அதன்படி, நேற்று நடத்தப்பட்ட மொத்த கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 22,236 ஆகும்.

இதனிடையே, இனிவரும் காலங்களில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களில் பி.சி.ஆர் பரிசோதனைகள் செய்யப்படாது என்றும், அதற்குப் பதிலாக விரைவான அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

இதனால், கொரோனா வைரஸ் பரவுவதை விரைவாக அறிந்து கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது இவ்வாறிருக்க, இலங்கையில் ஒரு மாதத்துக்கு பின்னர் மிகக்குறைந்த பி.சி.ஆர் பரிசோதனைகள் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  சுகாதார ஊக்குவிப்பு பணியகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதிக்கு பின்னர் ஒரு மாதத்தில் நடத்தப்பட்ட மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பி.சி.ஆர் பரிசோதனைகள் இதுவாகும்.

அதன்படி, 2021, ஜூன் மாதம் 15 ஆம் திகதியன்று இலங்கையில் மொத்தம் 15,214 பி.சி.ஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் இன்று (16) முதல் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் ஒரு தொகுதி தடுப்பூசிகள் நாளை (17) கண்டிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.