மாகாண சபைகளினால் நிர்வகிக்கப்பட்ட வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொள்வது அரசியலமைப்பிற்கு முரணானது என அமைச்சரவையில் தான் சுட்டிக்காட்டியதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மாகாணசபையினால் நிர்வகிக்கப்பட்டு வந்த கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் உட்பட ஒன்பது மாவட்ட பொது வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தினால் பொறுப்பேற்பதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக தன்னுடைய ஆட்சேபனையை அமைச்சரவையில் முன்வைத்து, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில், 13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக அதிகாரங்கள் மாகாண சபைக்கு பகிரப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியதுடன், இதனூடாக மாவட்ட பொது வைத்தியசாலைகள், கிராமிய வைத்தியசாலைகள் மற்றும் மகப்பேற்று நிலையங்கள் போன்றவற்றின் அதிகாரம் மாகாண சபையிடம் உள்ளது என்பதனை எடுத்துச் கூறினேன் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த காலங்களில் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வேளைகளில் தனக்கிருந்த அரசியல் பலத்தினைப் பயன்படுத்தி, மாகாண சபைக்கு பகிரப்பட்ட அதிகாரங்கள் மத்திய அரசாங்கம் எடுத்துக் கொள்வதை தடுத்து நிறுத்தியதாகவும், ஆனால் இப்போது தடுத்து நிறுத்தும் அரசியல் பலம் தன்னிடம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் தீர்க்கதரிசனமற்ற தீர்மானங்களின் விளைவுகளே இவ்வாறான நிகழ்வுகளை தவிர்க்க முடியாத சூழலை ஏற்படுத்தியுள்ளது எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.