நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை எதிர்வரும் 21 ஆம் திகதி நீக்குவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் சமூகத்திற்குள் எவ்வளவு தூரம் பரவியுள்ளது என்பதை கண்டறியும் நோக்கில் பயணக் கட்டுப்பாட்டை தளர்த்துவதற்கு முன்னர் நாடு முழுவதும் தொடர்ச்சியாக விரைவான அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நாடு முழுவதும் விரைவான அன்டிஜன் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்படி ஒவ்வொரு பிரதேச சுகாதார துறைகளின் தலைவர்களுக்கும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தனவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் இந்த வார இறுதியில் நாட்டில் எந்தளவு தூரத்துக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது என்பது தொடர்பில் ஒரு தெளிவான அறிக்கையொன்றை பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.
இதேவேளை, நாட்டில் பி.சி.ஆர் பரிசோதனைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், பரிசோதனைகள் குறைக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க, விரைவான அன்டிஜன் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் நாட்டை விரைவில் திறக்க முடியும் என்று சுகாதார தரப்பினர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதனிடையே, நாடுபூராகவும் நேற்றைய (15) தினம் 22, 236 பி.சிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.