July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஜனாதிபதி செயலாளரை உடனே பதவி நீக்குங்கள்’; முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கோரிக்கை

மிகவும் குறுகிய காலத்தில் மக்களின் வரவேற்பை இழந்த அரசாங்கம் கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் தான் என நாரஹேன்பிட்டி அபயாராமய விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து எதிர்ப்பினை வெளியிட்டிருந்ததுடன், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ .ஜயசுந்தரவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தான் உள்ளார். ஆனால், ஜனாதிபதியின் அனுமதியின்றி அதிகாரிகள் செயற்படுவார்களாயின், யாரிடம் இதனை முறையிடுவது என தேரர் கேள்வி எழுப்பினார்.

இதில் அதிகாரிகள் ஜனாதிபதியின் கண்ணில் மண்ணைத் தூவியுள்ளனர். நாம் மன்னர் என நினைத்துக் கொண்டு எவரேனும் செயற்படுவதாக இருந்தால் அது அந்த தனிநபரின் தவறு அல்ல, நாட்டை நிர்வகிக்கும் அதிகாரிகளின் குறைபாடே அதற்கு காரணம் எனவும் தேரர் குறிப்பிட்டார்.

எந்தவொரு நபரையும் சுற்றி எட்டப்பன்மார் இருப்பார்கள். இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருக்கும் மிகப்பெரிய எட்டப்பனாக கலாநிதி பி.பீ .ஜயசுந்தரவை காண்கின்றோம். எனவே, ஜனாதிபதியின் இந்த விழ்ச்சிக்கு அவரே காரணம்.

இதனால் பி.பீ .ஜயசுந்தரவை பதவியில் இருந்து நீக்கி, அதனை வழிநடத்தக் கூடிய ஒருவரை நியமிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன், அவ்வாறு செய்யாவிட்டால் எதிர்காலத்தில் பாரிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றை ஏற்பாடு செய்யப் போவதாகவும் அரசாங்கத்திற்கு தேரர் எச்சரிக்கை விடுத்தார்.