
இலங்கையில் சூரிய சக்தியிலான மின் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா 100 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க முன்வந்துள்ளது.
அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்துக்கு அமைய, சூரிய சக்தியிலான மின் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்காக இந்திய அரசாங்கம், இந்திய ஏற்றுமதி- இறக்குமதி வங்கியின் ஊடாக 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதுடன், இதற்கான இரு தரப்பு கடன் ஒப்பந்தமும் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்துக்கும் இந்திய ஏற்றுமதி, இறக்குமதி வங்கிக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள இக்கடன் ஒப்பந்தத்தை இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மின்சக்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரின் முன்னிலையில், நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆடிகல மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் பரிமாறிக்கொண்டனர்.
அரச கட்டடங்கள், சமய ஸ்தாபனங்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் வீடுகளின் பங்களிப்பைப் பெற்று, சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்வதே அரசாங்கத்தின் முக்கிய திட்டமாகும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் குறைந்த வருமானம் பெறும் வீடுகளுக்கான பொருளாதார நன்மைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் அரச நிறுவனங்களில் மின்சாரத்துக்காக செலவாகும் அதிக தொகையைக் குறைப்பதற்கும் அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
இந்த திட்டத்தின் முதற்கட்டமாக பாராளுமன்றத்துக்குத் தேவையான மின்சாரம், தியவன்னா ஓயாவை மையமாகக் கொண்டு, நீரில் மிதக்கும் மின்கலங்களின் மூலம் பெறப்படவுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.