November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மக்களின் குரலுக்கு செவிசாய்க்காவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்’; அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் கம்பஹா அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிக்கும் போது மக்களின் குரலுக்கு செவிசாய்க்காவிட்டால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

கம்பஹாவின் வெரெல்லவத்த பகுதியில் ஊடகங்களிடம் பேசிய அவர், முந்தைய அரசாங்கங்கள் எடுத்த தவறான முடிவுகளை சரி செய்வதற்கு தான் மக்கள் புதிய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்துள்ளார்கள். எனவே தற்போதைய அரசாங்கம் அந்தப் பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார்.

இதனிடையே, சமீபத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் வெள்ளத்தில் மூழ்கியிருந்த கம்பஹா மற்றும் அத்தனகல்ல ஆகிய பிரதேசங்களை ஆய்வு செய்த பின்னர், கம்பஹா மாவட்டத்தில் மத்திய அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அமைச்சர் கூறினார்.

அத்துடன், குறித்த வேலைத்திட்டத்தை மறு ஆய்வு செய்து ஒரு முடிவை எட்டிய பின்னர் புனரமைப்பு மீண்டும் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

இருப்பினும், மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் நிர்மாணப் பணிகளை இடைநிறுத்துவதற்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளர் டபிள்யூ.ஆர் பிரேமசிறி தெரிவித்தார்.

அதேபோல, அதிவேக நெடுஞ்சாலையில் கடவத்தையிலிருந்து மீரிகம வரையிலான பகுதியின் நிர்மாணப் பணிகள் தொடரும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், நேற்று தனது கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவித்த அமைச்சர் பிரசன்னா ரணதுங்க, மக்களின் குரல் செவிசாய்க்காவிட்டால், கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்தக்காரர்களுக்கு மக்கள் பதிலளிப்பார்கள் என்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.