இலங்கையில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், வாடிக்கையாளர்களுக்கு மதுபானங்களை இணைய வழியில் கொள்வனவு செய்வதற்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் இலங்கை மதுவரித் திணைக்களத்தின் முன்மொழிவிற்கு நிதி அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது.
எனினும், நிதியமைச்சினால் கொள்கை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள போதிலும் திட்டத்தை செயற்படுத்த கொவிட் கட்டுப்பாட்டு பணிக்குழுவின் ஒப்புதலை பெற்றுக்கொள்ள வேண்டும் என இலங்கை மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
நீண்ட கால பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக பொதுமக்கள் வீடுகளில் மதுபானம் தயாரிக்க ஆரம்பித்துள்ளதாகவும், இதனால் அரசாங்கத்துக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டி மதுபானங்களை இணைய வழியில் விற்பனை செய்ய நிதி அமைச்சின் அனுமதியை கலால் திணைக்களம் கோரியது.
இதனிடையே, பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள இந்த தருணத்தில் மதுபானம் விற்பனை செய்வதால், வீடுகளுக்குள் வன்முறை அதிகரிக்கும் அபாயம் இருக்கும் என்றும், இதனால் நாளொன்றுக்கு 100 மரணங்கள் வரை இடம்பெறலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.