January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஜீஎஸ்பி வரிச் சலுகை தொடர்பில் அரசாங்கம் சாதகமாகப் பதிலளிக்க வேண்டும்’: ஆடை உற்பத்தி சங்கங்கள்

ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு ஐரோக்கிய ஒன்றியத்தின் ஜீஎஸ்பி பிளஸ் வரிச் சலுகை முக்கியமானது என்றாலும், ஐரோப்பிய பாராளுமன்ற தீர்மானம் தொடர்பாக பீதியடையத் தேவையில்லை என்று ஆடை உற்பத்தி சங்கங்களின் ஒன்றிணைந்த மன்றம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்துக்கு அரசாங்கம் சாதகமாகப் பதிலளிக்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் ஆடை உற்பத்தி சங்கங்களின் ஒன்றிணைந்த மன்றத்தின் செயலாளர் டுலி குரே தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள ஜீஎஸ்பி வரிச் சலுகை திரும்பப் பெறப்பட்டால், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதிச் செலவில் 12 வீத அதிகரிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஆடை உற்பத்திகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக செயலாளர் டுலி குரே சுட்டிக்காட்டியுள்ளார்.

2019 ஆம் ஆண்டில் ஆடை ஏற்றுமதி 5.1 வீத வளர்ச்சியைக் காட்டியிருந்தாலும், 2020 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று ஏற்றுமதியை 21 வீதத்தால் பாதித்துள்ளதாகவும் ஆடை உற்பத்தி சங்கங்கள் தெரிவித்துள்ளன.

ஜீஎஸ்பி வரிச் சலுகை நீக்கப்பட்டால் இலங்கையில் ஒரு வர்த்தக மாற்றம் இடம்பெறக்கூடும் என்றும் அது மிகவும் சிரமமாக இருக்கும் என்றும் குறித்த சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை ஜீஎஸ்பி வரிச் சலுகையை இழக்கும் நிலை ஏற்படாமல் இருக்க, அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.