July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சீனாவின் எழுச்சியை அடிப்படையாகக் கொண்டதே ஆசியாவின் எழுச்சி’: பிரதமர் மகிந்த நம்பிக்கை

சீனாவின் எழுச்சியை அடிப்படையாகக் கொண்டே இந்த நூற்றாண்டில் ஆசியாவின் எழுச்சி இடம்பெறும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு விழாவில் இணையவழியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி இயக்கத்தின் ஆதரவு காரணமாக இலங்கையால் ஒரு அணிசேரா நாடாக சுதந்திர உலகில் முன்னேற முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு விழாவுக்கு இலங்கை சார்பாக பிரதமர் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆசியாவில் மிகப்பெரியதும், முக்கியமானதுமான கட்சி என்று தான் கருதுவதாகவும் சீனா என்பது நாடு மட்டுமல்ல, மாபெரும் நாகரிகமும் ஆகும் என்றும் மகிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.

சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையே வரலாற்று ஒற்றுமைகள் காணப்படுவதாகவும் இலங்கை ஒரு சக்திவாய்ந்த நாடாக மாறுவதற்கு சீனா பெரிதும் உதவியதாகவும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகம் எவ்வளவு மாறினாலும் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் சமத்துவத்திற்காக முன்னின்றதை மறந்துவிடக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.