கொரோனா வைரஸ் காரணமாக பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் இணைய வழியில் மதுபானங்கள் விற்பனை செய்வது பொருத்தமற்ற நடவடிக்கை என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையானது மதுபான விற்பனையை அதிகப்படுத்தும் எனவும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்தார்.
இன்று (16) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
இந்த முடிவு சுகாதாரத்துறை மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு மறைமுகமாக பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
அதேபோல், பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள இந்த தருணத்தில் மதுபானம் விற்பனை செய்வதால், வீடுகளுக்குள் வன்முறை அதிகரிக்கும் அபாயம் இருக்கும் என்றும், இதனால் நாளொன்றுக்கு 100 மரணங்கள் வரை இடம்பெறலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு காரணமாக, சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை என்பன கடுமையான சமூக பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளதாக மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க தெரிவித்திருந்தார்.
இதனால் பல்பொருள் அங்காடிகளில் இருந்து இணைய வழியில் மதுபானம் வாங்க அனுமதிக்குமாறு பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எனவே, இந்தப் பரிந்துரைகள் ஏற்கனவே நிதியமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சிலிருந்து நிபந்தனை அனுமதி பெறலாம் என்றும் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.