விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட இருவர் 10 மாதங்களின் பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
2013 ஆம் ஆண்டில் இடம்பெற்ற வர்த்தகர் மொஹமட் ஷியாமின் கொலை வழக்குடன் தொடர்புடைய, போலியான சாட்சியங்களை தயாரித்த குற்றச்சாட்டில், ஷானி அபேசேகர மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸ் ஆகியோர் 2020 ஜுலை 31ஆம் திகதி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், தம்மை பிணையில் விடுவிக்குமாறு வலியுறுத்தி, கம்பஹா நீதவான் நீதிமன்றம் மற்றும் கம்பஹா மாவட்ட நீதிமன்றங்களில் அவர்களினால் முன்வைக்கப்பட்டிருந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன.
இதனையடுத்து, தம்மை பிணையில் விடுவிக்குமாறு வலியுறுத்தி அவர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மீளாய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில், குறித்த மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இருவரையும் பிணையில் விடுதலை செய்யுமாறு அறிவித்துள்ளது.
இதன்படி இருவரையும் தலா 10 இலட்சம் ரூபா என்ற இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யுமாறு அறிவித்துள்ள நீதிமன்றம், இருவரும் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாதவாறு அவர்களின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் அறிவித்துள்ளது.