November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரணிலின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற ஆசனத்திற்கு ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சியினால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 31 ஆம் திகதி நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கவை தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்க வேண்டுமென்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

அந்தத் தீர்மானம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் இன்று அறிவிக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

இதன்படி தேர்தல்கள் ஆணைக்குழு அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவுள்ளதுடன், அதன்பின்னர் அடுத்தவாரத்தில் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

2020 ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, நாடுபூராகவும் 249,435 வாக்குகளை பெற்றிருந்த போதும், எந்தவொரு மாவட்டத்திலும் ஒரு ஆசனத்தையேனும் பெற்றிருக்கவில்லை. ஆனால் வாக்கு வீகிதத்தின் அடிப்படையில் அந்தக் கட்சிக்கு தேசியப் பட்டியல் ஆசனம் ஒன்று வழங்கப்பட்டிருந்தது.

அந்த ஆசனத்திற்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பாக கடந்த 10 மாதங்களாக ஆராய்ந்து வந்த ஐக்கிய தேசியக் கட்சி, தற்போது ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க இறுதித் தீர்மானத்தை எடுத்து அது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது.