January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்த அரசாங்கம் ஏழைகளின் கண்ணீரில் சவாரி செய்து கொண்டிருக்கின்றது; சிறீதரன் எம்.பி

எரிபொருள் விலையேற்றத்தினூடாக மக்களின் உணவிலும் வாழ்க்கையிலும் பாரிய அளவில் இந்த அரசாங்கம் கை வைத்திருக்கின்றது. மிகப் பெரிய அளவில் இந்த நாட்டு மக்களை படுகுழியில் தள்ளுகின்ற வேலையை இந்த அரசாங்கம் செய்து கொண்டிருக்கின்றது. தங்களுடைய தெரிவும் இனவாத அடிப்படையில் அவர்கள் அளித்த வாக்கும் எவ்வளவு கேவலமான முடிவு என சிங்கள மக்கள் எண்ணத் தொடங்கியுள்ளார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேசத்தில் கொரோனா நிலைமையால் பாதிப்புற்ற வறிய குடும்பங்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் அன்றாடம் உழைத்து வாழும் மக்களின் பொருளாதார நலிவு நிலையைச் சமாளிக்கும் வகையில் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் செயற்பாட்டின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தொவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பெற்றோல் விலையேற்றம் தொடர்பில் இன்று நாட்டில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கடந்த ரணில்- மைத்திரி அரசு இருந்த போது குறிப்பிட் ஆறு, ஏழு ரூபா விலைச் சூத்திரத்தில் விலையேற்றம் இடம்பெற்றதைக் காரணம் காட்டி மஹிந்த ராஜபக்ஷ துவிச்சக்கர வண்டியில் பாராளுமன்றத்திற்கு வந்தார். ஆனால் இன்று அவர்களால் ஒரு லீட்டர் பெற்றோல் 20 ரூபா, டீசல் 12 ரூபா, மண்ணெண்ணெய் 7 ரூபா வரை விலையேற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. மிகப் பெரிய அளவில் இந்த நாட்டு மக்களைப் படுகுழியில் தள்ளுகின்ற வேலையை இந்த அரசாங்கம் செய்து கொண்டிருக்கின்றது.

உலகத்திலே, ஆசியாவிலே ஏனைய நாடுகளை விட இங்குதான் பெற்றோல் விலை குறைவென்று அவர்கள் சொன்னாலும் அந்த நாடுகளில் இருக்கின்ற அரிசி, மா மற்றும் ஏனைய உணவுப் பொருட்களுடன் ஒப்பிடுகையில் நமது நாட்டில் அவற்றின் விலை அதிகமாக இருக்கின்றது. இங்கு எரிபொருளின் விலையேற்றம் என்பது தனியே எரிபொருளுக்கு மாத்திரமல்ல எரிபொருளைப் பயன்படுத்துகின்ற போக்குவரத்தில் இருந்து உணவுத் தயாரிப்பு என விலை அதிகரிப்பு இடம்பெறும். தற்போது எரிவாயுவுக்கான விலையும் அதிகரிக்க இருப்பதாகவும் தகவல்கள் இருக்கின்றது.

எனவே மக்களின் உணவிலும் வாழ்க்கையிலும் பாரிய அளவில் இந்த அரசாங்கம் கை வைத்திருக்கின்றது. இந்த அரசாங்கமானது மூழ்கும் நிலையிலுள்ள கப்பலுக்கு சமமானதாகவே இருக்கின்றது. அது மூழ்குகின்ற நிலையிலும் நீரோ மன்னன் பிடில் வாசித்ததைப் போன்று இந்த நாட்டின் தலைவர் ஏழைகளின் கண்ணீரிலே பிடில் வாசித்துக் கொண்டிருக்கின்றார். அதேபோல் அரசாங்கம் ஏழைகளின் கண்ணீரில் சவாரி செய்து கொண்டிருக்கின்றது.

சிங்களம், தமிழ், முஸ்லீம் மக்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இன்று சிங்கள மக்கள் வெறுப்படைந்து போயிருக்கின்றார்கள்.தங்களுடைய தெரிவும் இனவாத அடிப்படையில் அவர்கள் அளித்த வாக்கும் எவ்வளவு கேவலமான முடிவு என்று அவர்கள் நினைக்கும் அளவிற்கு இந்த அரசின் செயற்பாடுகள் அவர்களுடைய மனநிலைகளை புரிய வைத்திருக்கின்றது.

இன்று இந்த நாட்டின் தலைவரின் தலைமையிலான இந்த அரசு பெற்றோல் விலையேற்றத்தினூடாக எல்லா மக்களுடைய அடிப்படை வாழ்வையும் ஆட்டங்காண வைத்திருக்கினறது. அதிலும் இந்தக் கொரோனா நோய் பரவியிருக்கின்ற சூழலில் வாழ்வாதாரத்திற்காக ஏங்குகின்ற அன்றாடம் உழைத்து வாழும் மக்களின் வாழ்க்கையெல்லாம் கேள்விக்குறியாக இருக்கின்ற போது எரிபொருள் விலையேற்றம் இன்னும் இன்னும் அவர்களைப் படுபாதாளத்திற்குள் தள்ளியிருக்கின்றது என்று அவர் மேலும் தெரிவித்தார்.