நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருள் விலையை அதிகரித்தால் மட்டுமே எம்மால் ஓரளவேனும் சமாளிக்க முடியும். ஆகவே இப்போதைக்கு எரிபொருள் விலை குறையாது என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
ஆகவே எரிபொருள் நெருக்கடியில் இருந்து மீளும் வரையில் தனியார் வாகன பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுமாறும் மக்களிடம் கேட்டுக் கொள்வதாகவும் அவர் கூறினார்.
கச்சா எண்ணெய் விலை குறைப்பின் காரணமாக எமக்கு கிடைத்த வருமானமானது செயற்பாட்டு வருமானமாகும்.இதன் மூலமாக 2020 ஆம் ஆண்டு இலாபமானது 237 கோடியாகும்.ஆனால் இதுவரையில் நாம் எதிர்கொள்ளும் நட்டமானது 38 ஆயிரத்து 800 கோடி ரூபாவாகும்.இவ்வளவு நட்டத்தில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் இயங்கிக் கொண்டுள்ள நிலையில், 237 கோடி ரூபா இலாபத்தை வைத்துக்கொண்டு எதனையும் செய்ய முடியாது.
எரிபொருள் கொள்வனவு என்பது அரசாங்கம் செய்யும் மிகப்பெரிய கொள்வனவாகும்.இதில் அமைச்சர் நேரடியாக தொடர்புபட மாட்டார். விசேட நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவை ஜனாதிபதியே நியமிப்பார். மத்திய வங்கி மற்றும் திறைசேரி உறுப்பினர்களும் உள்ளனர். அவர்கள் எடுக்கும் தீர்மானமே இறுதியானது.
மக்கள் முடிந்தளவு தமது வாகனங்களை அனாவசியமாக பயன்படுத்துவதை நிறுத்துங்கள்.அத்தியாவசிய சேவைகள் இயங்கட்டும்.ஆனால் தனியார் வாகனங்களின் பயன்பாட்டை முடிந்தளவு குறையுங்கள். பொருளாதார ரீதியில் மிகப்பெரிய நெருக்கடியில் நாம் உள்ளோம்.
ஆகவே நேரடியாக மக்களுக்கு உண்மையை நான் கூறி நிலைமையை தெளிவுபடுத்தவே விரும்புகிறேன்.அதுமட்டுமல்ல கச்சா எண்ணெய் வாங்க எம்மிடத்தில் பணம் இல்லை.தவணைக் கொடுப்பனவுகளில் தான் நாம் இன்றும் பெற்றுக்கொண்டுள்ளோம். திறைசேரியிலும் பணம் இல்லை. இதுவே எமது உண்மையான நிலைமையாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.