November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 54 வீதமானோர் நீரிழிவு நோயாளிகள்’

இலங்கையில் இதுவரையில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களில் 54.9 சதவீதமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களாவர். இவ்வாறான தொற்றா நோய்களுடன் கொவிட் தொற்றுக்கு உள்ளாகுபவர்களுக்கும்,ஏனைய நோயாளர்களுக்கும் சிகிச்சை வழங்கும் செயற்பாடுகள் முறையாக முன்னெடுக்கப்படாவிட்டால் இந்தியாவை விட அதிகளவான மரண வீதம் பதிவாகுவதை தவிர்க்க முடியாது என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்தார்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து பேசிய அவர்;

இலங்கையில் கொவிட் தொற்றால் பதிவாகியுள்ள மரணங்களின் எண்ணிக்கையானது ஒரு மில்லியனுக்கு 2.39 ஆக காணப்படுகிறது. இந்தியா 2.38, பிரித்தானியா 0.13 என்ற அடிப்படையில் காணப்படுகின்றன.கொவிட் மரணங்கள் பதிவாகும் வீதத்தின் அடிப்படையில் தற்போது நாம் இந்தியாவை விட முன்னிலை வகிக்கின்றோம்.

எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவுடன் ஒப்பிடும் போது மரணங்கள் குறைவாகக் காணப்பட்டாலும்,பதிவாகும் வீதம் சிக்கலானதாகும்.

இதுவரையில் இலங்கையில் பதிவாகியுள்ள தொற்றாளர்களில் 54.9 வீதமானோர் நீரிழிவு நோயாளர்களாவர்.இதே போன்று 51.2 வீதமானோர் உயர் இரத்த அழுத்தம் உடையவர்களாகவும்,21.3 வீதமானோர் இதய நோயுடையவர்களாகவும் காணப்படுகின்றனர்.

இவற்றினடிப்படையில் அவதானிக்கும் போது இலங்கை கொவிட் பரவலில் முக்கிய கட்டத்திலுள்ளது.எனவே தற்போது ஏனைய நோய்கள் தொடர்பான செயற்பாடுகள் முறையாக நிர்வகிக்கப்படாவிட்டால் இந்தியாவை விட அதிகளவான மரணங்கள் பதிவாகுவதை எம்மால் கட்டுப்படுத்த முடியாது.

கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சிறு வீழ்ச்சி காணப்படுகிறது. கடந்த வாரங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாடுகளின் காரணமாக எதிர்வரும் நாட்களிலும் இதே நிலைமையை எதிர்பார்க்க முடியும்.

எனினும் மரணங்கள் பதிவாகும் வீதம் நாம் எதிர்பார்த்தளவிற்கு குறைவடையவில்லை.எனவே தொற்றாளர்களை பராமரிக்கும் செயற்திட்டங்கள் முறையாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சிடம் கேட்டுக் கொள்கின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.