November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“ரணில்-ராஜபக்ஷவினரின் ‘அரசியல் டீல்’ குறித்து எமக்கு புதிதாக ஒன்றும் கூறத்தேவையில்லை”

ராஜபக்ஷவினருடன் செய்துகொண்டுள்ள அரசியல் ‘டீல் ‘ காரணமாகவே ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திற்கு வருகின்றார். அவர் எதிர்க்கட்சியின் பக்கம் அமர்ந்தாலும் அரசாங்கத்தை பலப்படுத்தும் பணியையே முன்னெடுப்பார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.

மேலும்,ரணில்-ராஜபக்ஷ அரசியல் டீல் குறித்து எமக்கு புதிதாக ஒன்றும் கூறத்தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சிலர் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.அதற்கான ஆதாரங்கள் எம்மிடத்தில் உள்ளது.அதேபோல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பின் போதே ரணிலை பாராளுமன்றத்திற்கு வருமாறு மஹிந்த ராஜபக்ஷ அழைத்துள்ளார். ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எவரும் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து கொள்வது குறித்து எந்த தீர்மானமும் எடுக்கவில்லை.

அதுமட்டுமல்ல தேர்தலில் தோல்வியை சந்தித்த எந்தவொரு நபரையும் பாராளுமன்றத்திற்கு அனுமதிக்க முடியாது என்பதை 2015 ஆம் ஆண்டு தேர்தலின் போதும்,இறுதி தேர்தலின் போதும் ரணில் விக்ரமசிங்க கூறியிருந்தார். ஆனால்,இறுதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தோல்வியை சந்தித்துள்ளார்.எனவே இவ்வாறு யோசனைகளை நிறைவேற்றிவிட்டு வெட்கமில்லாது அவர் எவ்வாறு பாராளுமன்றத்திற்கு வருவார் என்பதை தனக்குத் தானே அவர் கேட்டுக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.