January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசாங்கத்திற்குள் பிளவுகளை ஏற்படுத்த இடமளிக்கமாட்டேன்; பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்த அமைச்சரவை தீர்மானத்தை எதிர்த்து கருத்துக்களை முன்வைத்தமை மற்றும் அமைச்சர் உதய கம்மன்பிலவை பதவி விலக வலியுறுத்திய விடயங்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசத்திடம் விசாரணைகளை நடத்தி அரசாங்கத்திற்குள் நிலவும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆளுந்தரப்பு பங்காளிக் கட்சி தலைவர்களிடம் வாக்குறுதியளித்துள்ளார்.

அரசாங்கத்தை பிளவுபடுத்த அனுமதிக்கப்போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசத்தின் செயற்பாடுகள் மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியின் அனுமதியுடன் நிதி அமைச்சர் என்ற வகையில் நான் கையொப்பமிட்டு அமைச்சரவையிலும் அனுமதி பெறப்பட்டு தீர்மானமாக அறிவிக்கப்பட்டுள்ள ஒரு விடயம் குறித்து கட்சியின் அனுமதி இல்லாது செயலாளர் அறிவிப்பொன்றை விடுத்துள்ளமை குறித்து சாகர காரியவசத்திடம் விசாரணைகளை நடத்துவதாகவும் அவர் தெரிவித்திட்டார்.

அதேபோல் அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள சிறிய கருத்து முரண்பாடுகளை சரி செய்து எதிர்க்கட்சிகள் விமர்சிக்கும் விடயங்கள் அரசானகத்துக்குள் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அரசாங்கத்தை பலப்படுத்தும் நடவடிக்கையை எடுப்பதாகவும் பங்காளிக்கட்சி தலைவர்களிடம் பிரதமர் தெரிவித்துள்ளார்.