
எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பல் குறித்த வழக்கு விசாரணையில் நீதிமன்ற உத்தரவுகளை மீறுபவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பது பொருத்தமானது என்று கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனா அபேவிக்ரம இன்று (15) தெரிவித்தார்.
இன்று கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை பரிசீலித்த பின்னர் அவர் இதை தெரிவித்தார்.
குறித்த கப்பலின் தேசிய முகவர் நிறுவனமான சீ.கோன்சோடியம் லங்கா தனியார் நிறுவனம் மின்னஞ்சல் தரவுகளை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள போதிலும் குறித்த நிறுவனம் அதனை வழங்க மறுத்துள்ளதாக சி.ஐ.டி. சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னகோன் குற்றம் சாட்டினார்.
இதன்போது, நிறுவனம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன, சிஐடி அதிகாரிகள் நிறுவனத்தின் முழு தரவுத்தளத்தையும் தங்களிடம் ஒப்படைக்குமாறு கோருவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதையடுத்து விசாரணைக்கு தொடர்புடைய மின்னஞ்சல் தரவுகளை மட்டுமே வழங்க வேண்டும் என்றும், முழு தரவுத்தளமும் வழங்கப்பட்டால் நிறுவனத்தின் வணிக ரகசியங்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் உத்தரவில் எந்தவொரு தரப்பினரும் அதிருப்தி இருந்தால், அவர்கள் உயர் நீதிமன்றத்திற்குச் சென்று அந்த உத்தரவை மாற்றலாம் என இதன் போது அரசாங்கத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரலுக்கு சுட்டிக்காட்டினார்.